சிவகங்கையில் ஒரே மேடையில் 15 பேர் உலக சாதனை முயற்சி

சிவகங்கையில் ஒரே மேடையில் 15 பேர் உலக சாதனை முயற்சி செய்தனர். அதில், ரஷியாவை சேர்ந்த யோகா மைய நிறுவனர் ஐஸ் கட்டியில் 1¾ மணி நேரம் யோகாசனம் செய்து சாதனை படைத்தார்.

Update: 2019-02-04 23:00 GMT

சிவகங்கை,

சிவகங்கையில் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி 18 உலக சாதனைகள் ஒரே மேடையில் நிகழ்த்தப்பட்டன. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். சோழன் உலக சாதனை புத்தக அறக்கட்டளை நிறுவனர் நிமலன் வரவேற்று பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி மற்றும் சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தங்கதுரை, தொழில் அதிபர் மகேந்திரன் மற்றும் ரஷ்யாவில் உள்ள சர்வதேச யோக நித்தி மையம் நிறுவனர் டாக்டர் முருகதாஸ் தலைமையிலான 8 பேர் கொண்ட யோகா குழுவினரும் கலந்துகொண்டனர்.

பின்னர் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 6 வயது சிறுவன் முதல் 42 வயது பெரியவர் வரை என 15 பேர் பல்வேறு சாகசங்களை செய்து உலக சாதனை படைத்தனர். அதில் 18 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

ரஷியாவை சேர்ந்த சர்வதேச யோக நித்தி மையம் நிறுவனர் டாக்டர் முருகதாஸ் (வயது 42) ஐஸ் கட்டிகளின் மீது 1¾ மணி நேரம் அமர்ந்தபடி யோகாசனம் செய்தார்.

பிரஜித் கிருஷ்ணன் (7), விருச்சிகானத்தில் 3 நிமிடம் 30 நொடிகள் உடலை சமநிலையை செய்தார். மேலும் ஒரு நிமிடத்தில் 79 தண்டால் எடுத்தார்.

மகிபாலன் (13), மயூராசனத்தில் 3 நிமிடம் தனது உடலை சமன் செய்தார். தண்டால் நிலையில் இருந்தவாறு 30 வினாடிகளில் 33 முட்டி குத்துகளை தரையில் செய்தார்.

குருபிரசாத் (13), கைகள் நிமிர்ந்த நிலையில் விருச்சிகானத்தில் ஒரு நிமிடத்தில் 73 சிட்அப்ஸ் விதம் 2 நிமிடம் மற்றும் 21 வினாடிகள் செய்தார்.

தருண்பிரபு (14), 30 வினாடிகளில் 14 பிஸ்டல் ஸ்குவாட்ஸ், 30 வினாடிகளில் 24 பிளையிங் புஷ்அப்ஸ் மற்றும் ஒரு நிமிடத்தில் 90 உக்கிகள் செய்தார்.

தர்‌ஷன் (10), ஒரு நிமிடத்தில் 36 முறை கைகள் உதவி இல்லாமல் பின்னே வளைந்து தரையில் முட்டி எழும்புதல் செய்தார். மேலும் 2 மேஜைகளின் இடையே கால்களை விரித்தபடி 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தார்.

இதுதவிர ஜோதி கிருஷ்ணா (15), சகானா (13), ரகு டேவிட்சன் (23), மிதுன் விஜய் (6), தரனீஷ் தேவன் (9), விஷ்ணு பிரபு (9), பிரணவ்குமார் (9), பாரதி கண்ணன் (12), ஜெகதீஸ் (20) ஆகியோரும் பல்வேறு சாகசங்களை செய்து சாதனை படைத்தனர்.

முடிவில் சாதனை படைத்தவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியொர் சான்றிதழ், பரிசுகளை வழங்கினர்.

மேலும் செய்திகள்