நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் தயாரித்த இயற்கை உரம் விற்பனை ஆணையர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் நகராட்சி சார்பில் வேப்பமூடு பூங்காவில் தயாரித்த இயற்கை உரம் விற்பனையை ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-05 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு சந்திப்பில் உள்ள பூங்கா திகழ்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் தினமும் சேகரிக்கப்படும் காய்ந்த இலைகள் மற்றும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் வலம்புரிவிளை குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றும்படி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் குப்பைகளை நகரின் பல்வேறு இடங்களில் பிரித்து கொட்டி உரமாக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

அதன்படி வேப்பமூடு பூங்காவில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் அங்கேயே உரமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பூங்காவின் ஒரு ஓரத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூங்காவில் சேகரிக்கப்படும் குப்பைகள், காய்கறி கழிவுகள் மற்றும் ஒரு சில இயற்கை பொருட்களை இந்த தொட்டியில் போட்டு உரமாக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.

இந்த நிலையில் தொட்டியில் கொட்டப்பட்ட குப்பைகள் தற்போது உரமாக மாறி உள்ளது. இதற்கு இயற்கை உரம் என்று நகராட்சி சார்பில் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயற்கை உரம் விற்பனை நேற்று தொடங்கியது. முதல் விற்பனையை நகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வேப்பமூடு பூங்காவில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது முதற்கட்டமாக 250 கிலோ இயற்கை உரம் தயாரித்துள்ளோம். இந்த உரத்தை யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். இதற்கான சரியான        விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரங்களை மக்கள் வாங்கி பயன் அடையலாம். இதே போல மத்திய அரசு திட்டத்தின் கீழ் நகரில் 11 இடங்களில் இயற்கை உரம் தயார் செய்வதற்கான கூடங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

இயற்கை உரம் விற்பனை நேற்று தொடங்கப்பட்டாலும் உரத்தின் பயன்பாடு முன்கூட்டியே தொடங்கி விட்டது. ஏன் எனில் பூங்காவில் இயற்கை முறையில் தயாரித்த உரத்தை கொண்டு பூங்காவின் ஒரு பகுதியில் தோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு தண்டங்கீரை, கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்ட செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன. இதில் கீரை நன்றாக வளர்ந்திருக்கிறது. ஒரு சில வெண்டை செடிகள் நன்கு வளர்ந்து காய் காய்த்திருக்கிறது. கத்தரி மற்றும் தக்காளி செடிகள் வளர்ந்து வருகின்றன. இந்த தோட்டத்தை நகராட்சி ஊழியர்கள் பராமரித்து வருகிறார்கள். இந்த தோட்டத்தில் விளைந்த கீரை விற்பனையையும் ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்