பெண் தீக்குளிக்க முயன்ற விவகாரம்: கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் பலத்த சோதனை

பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார்பலத்த சோதனை மேற்கொண்டனர்.

Update: 2019-02-05 23:00 GMT
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதே போல நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களின் உடமைகளை போலீசார் நன்கு சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடந்த சில மாதங்களாக தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்கள் வழக்கம்போல கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சென்றனர். அவர்களை போலீசார் சோதனை செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் அலுவலகம் முன் லட்சுமி என்ற பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அலுவலகத்தின் 2 நுழைவு வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்கள் மண்எண்ணெய் கேன் ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்று போலீசார் பலத்த சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்