அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-06 15:46 GMT

திருவண்ணாமலை,

நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 34), லாரி டிரைவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது பிரகாசுக்கும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தி.அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாசம் (46) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பிரகாசத்தின் மூலம் போளூர் தாலுகாவை சேர்ந்த டோமினிக், காளி, செஞ்சி தாலுகாவை சேர்ந்த சிவசங்கரன் ஆகிய 3 பேருடன் சந்தோஷூக்கு தொடர்பு ஏற்பட்டது.

அப்போது டோமினிக், சிவசங்கரன், காளி ஆகியோர் தங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளதாக சந்தோஷிடம் கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய சந்தோஷ் தனது உறவினர் மற்றும் நண்பர்களான ராமகிருஷ்ணன், தனபால் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் என்று கூறி, இருவருரிடமும் தலா ரூ.7 லட்சம் வாங்கி அதை பிரகாசம் மூலமாக போளூரில் உள்ள டோமினிக் வீட்டில் வைத்து டோமினிக், காளி, சிவசங்கரன் ஆகியோரிடம் வழங்கி உள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் அவர்கள் திருப்பித்தரவில்லை.

இது குறித்து சந்தோஷ் கடந்த 2015–ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டோமினிக், சிவசங்கரன் ஆகியோரை கைது செய்தனர். காளி முன்ஜாமீன் பெற்று கொண்டார். பிரகாசம் தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரகாசத்தை கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தி.அத்திப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்த பிரகாசத்தை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்