மாடு வாங்க கடன் வழங்குவதில் பாரபட்சம்: தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மாடு வாங்க கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து தஞ்சை வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-06 23:00 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை ஒன்றியம் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது கடகடப்பை ஊராட்சி. இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆடு வாங்கியவர்கள் மாடு வாங்க கடன் வழங்குவதற்கு அரசு திட்டத்தில் வழிவகை இல்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடு கொடுத்தனர். ஆனால் தற்போது ஆடு வாங்கியவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும், மாடு வாங்குவதற்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை தடுக்கக்கோரியும், மாடு வாங்க கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதையும் கடகடப்பை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:–

தஞ்சை ஊராட்சிக்கு உட்பட்ட கடகடப்பை ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆடு வாங்க கடன் கொடுத்தனர். அப்போது வசதி படைத்தவர்கள், வண்டிமாடு வைத்திருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு கடன் இல்லை என்றும், வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் தான் ஆடு வாங்க கடன் தரப்படும் எனறும், ஆடு வாங்க கடன் வாங்கியவர்களுக்கு அடுத்த கட்டமாக மாடு வாங்க கடன் வழங்கப்படாது என்றும் கூறினர்.


இதையடுத்து நாங்கள் ஆடு வாங்க கடன் வாங்கிவிட்டோம். ஆனால் கடந்த சில தினங்களாக ஏற்கனவே ஆடு வாங்க கடன் வாங்கியவர்களுக்கும், சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களுக்கும் அதாவது வசதி படைத்தவர்களுக்கும் மாடு வாங்க கடன் தருகின்றனர். இது குறித்து கேட்டால் ஊராட்சி செயலாளர் தவறாக பேசுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

பின்னர் இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும், பொதுமக்கள் முறையிட்டனர்.

மேலும் செய்திகள்