‘வாட்ஸ்-அப்’ பார்த்து கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்

‘வாட்ஸ்-அப்‘ பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக அதிகாரி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

Update: 2019-02-06 22:15 GMT
மயிலாடுதுறை,

அரசு பஸ்சில் டிரைவர் ஸ்டியரிங்கை ஒரு கையில் பிடித்து கொண்டு, மற்றொரு கையில் செல்போனை வைத்து ‘வாட்ஸ்-அப்’ பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பான விசாரணையில் அந்த டிரைவர் யார் என்பது தெரிய வந்தது.

அவரது பெயர் அரங்கநாதன் என்பதும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும், அவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு அந்த பஸ்சை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராமமூர்த்தி, ‘வாட்ஸ்-அப்’ பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

வாகனங்களில் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டே செல்லக்கூடாது. போலீசார் பணியில் இருக்கும்போது செல்போன் பேசக்கூடாது. சுற்றுலா தலங்களில் உயரமான இடத்தில் இருந்தும், கடலில் பயணம் செல்லும்போது கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டு செல்பி எடுக்கக் கூடாது என்று சட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை மீறி செயல்படுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடும்போது சம்பந்தப்பட்டவர்கள் இறப்பதும், டிரைவராக இருந்தால் விபத்தின்போது பயணிகள் பலியாவதும், அதனால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்படும் சம்பவங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் இருந்து விடுபட அனைவரும் தன்னை உணர்ந்து செயல்பட்டால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

மேலும் செய்திகள்