தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள்-வியாபாரிகள் மோதல்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடைகளில் இருந்து பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-06 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் டீக்கடைகள், இனிப்பு கடைகள், செருப்பு கடைகள், பேன்சி ஸ்டோர், சிறு உணவகங்கள், குளிர்பான கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் உதவி நகரமைப்பு அதிகாரி ராஜசேகரன், வருவாய் அலுவலர் பிரசாத், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், பாபு, ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர்கள் வாசுதேவன், திருமுருகன், வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் முன்பு போடப்பட்டு இருந்த இரும்பு தகரம், மரப்பலகை போன்ற பொருட்களை அள்ளிச்சென்றனர். மேலும் அங்கிருந்த பூக்கடைகளில் இருந்த பூக்களையும் அள்ளி லாரியில் போட்டனர்.

பஸ் நிலையத்தின் நடைபாதையில் போடப்பட்டு இருந்த தரைக்கடைகளையும் அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் அள்ளிச்சென்றனர். செருப்புக்கடைகள் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அறிந்த கடை ஊழியர்கள், அவர்களே அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டனர்.

மாநகராட்சி ஊழியர்கள், கடையில் இருந்த மரப்பெட்டிகள், மரப்பலகைகள் போன்றவற்றை பெயர்த்து எடுத்து லாரியில் ஏற்றினர். மேலும் அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் லாரியில் ஏற்றினர். அப்போது வியாபாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முன் அறிவிப்பின்றி திடீரென்று வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பொருட்களையும் அள்ளிச்சென்றால் நாங்கள் என்ன செய்வது? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பழைய பஸ் நிலையம் பகுதியில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்