சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2019-02-06 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேலமாயனூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 47). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஒரு பெட்டி கடையில் மிட்டாய் வாங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமியை, இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதனால் உடல்ரீதியாக பாதிப்படைந்த அச்சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் விசாரணை நிறைவுற்றதால் நேற்று இந்த வழக்கில் நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முத்துசாமிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் உடல் மற்றும் மனரீதியாக அந்த சிறுமி பாதிப்புக்குள்ளானதால், சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக முத்துசாமி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து முத்துசாமியை போலீசார் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்