பரமக்குடியில் பரிதாபம் சாலையோரம் நின்ற என்ஜினீயரிங் மாணவி உயிரை பறித்த பள்ளிக்கூட வேன் செல்போன் பேசியபடி டிரைவர் ஓட்டினாரா? உறவினர்கள் போராட்டம்

பரமக்குடியில் சாலையோரம் நின்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் பரிதாபமாக இறந்து போனார். அதன் டிரைவர், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கூறி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-06 23:15 GMT

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் பரமக்குடி கூட்டுறவு பால்பண்ணையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகள் சாருலதா (வயது 20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மாணவி சாருலதா கல்லூரி வாகனத்தில் வந்து இறங்கி பரமக்குடி பாரதிநகர் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

அப்போது தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் குழந்தைகளை இறக்கி விட சென்றபோது, சாலையோரம் நின்ற மாணவி சாருலதா மீது மோதியது. இதில் அவர் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்தவர் தற்காலிக டிரைவர் என்றும், செல்போன் பேசியபடி ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி சாருலதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக வந்த சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளி வாகனங்களை சுமார் அரை மணி நேரம் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரை சேர்ந்த சந்திரமோகன்(37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்