ஊத்தங்கரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

Update: 2019-02-07 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி திருப்பூரில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இந்த தம்பதியின் 6 வயது மகள் ஊத்தங்கரையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து அருகில் உள்ள பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்து படித்தாள். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி சிறுமியை அவரது பாட்டி குளிக்க வைத்தார்.

அந்த நேரம் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து கேட்ட போது அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 62) என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பாட்டி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. சிறுமியை துன்புறுத்தி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்