ராஜீவ்காந்தி கொலை வழக்கு, அரசியல் லாபத்துக்காகவே 7 பேர் விடுதலையில் தாமதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற 7 பேர் விடுதலை அரசியல் லாபத்துக்காகவே தாமதமாகிறது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.

Update: 2019-02-07 22:45 GMT
திண்டுக்கல், 

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, 7 பேர் விடுதலைக்காக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார். அதன்படி திண்டுக்கல்லுக்கு நேற்று வந்த அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் மாநில அரசு சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி சட்டமன்றத்தில் அமைச்சரவை கூட்டப்பட்டு 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் கவர்னர் கையொப்பமிட்டால் 7 பேரும் விடுதலை ஆவார்கள். ஆனால் இதுவரை கவர்னர் கையொப்பம் இடவில்லை.

அரசியல் லாபத்துக்காக 7 பேரையும் விடுதலை செய்யாமல் அவர்கள் குறித்து பேசியே காலம் தள்ள வேண்டும் என்று அரசியல் கட்சியினர் நினைக்கின்றனர். அவர்களின் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்புவதில்லை. கவர்னர், மத்திய அரசுக்கு ஆதரவானவர் என்று மக்களை சந்தித்த போது பலர் என்னிடம் கூறியுள்ளனர். தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்குக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக கவர்னர் உடனடியாக கையொப்பமிட வேண்டும். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கக்கூடாது என விதி உள்ளது. ஆனால் 7 பேரும் 28 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். இவர்கள் விவகாரத்தை பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்கும் கூட்டத்தில் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்