திருப்போரூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-07 22:30 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த காயார் அருகே கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 21) கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காயார் போலீசார் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் சரவணனை கொலை செய்ததாக ஆதம்பாக்கம் மஸ்தான் கோவில் தெருவை சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி (25), கீரப்பாக்கம் யாதவ் தெருவை சேர்ந்த ராஜேஷ் (23), சென்னை பாடியநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்த பார்த்திபன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டில் இருந்து மாயமான சரவணன் கல்குவாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது செல்போன் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு கிடந்தது. இதற்கிடையே 26-ந்தேதி சரவணனின் செல்போனில் இருந்து அவரது நண்பர் தன்ராஜ் என்பவரது செல்போனுக்கு அவசரமாக ரூ.5 ஆயிரம் வேண்டும் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. அப்போது சரவணனின் எண் வேறு செல்போனிலும், புதுச்சேரி டவர் சிக்னலில் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த செல்போன் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தை சேர்ந்த அரி என்பவருடையது என்பதும், அதை அவர் சென்னை மூர்மார்க்கெட்டில் விற்றதும் தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் மூர்மார்க்கெட் சென்று அந்த கடையில் இருந்த கோபி என்பவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர், கடந்த மாதம் 26-ந்தேதி 3 பேர் கடைக்கு வந்து அந்த செல்போனை ரூ.500-க்கு வாங்கி சென்றதாக தெரிவித்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சரவணனின் நண்பர் தீபன்சக்கரவர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சரவணன், தீபன் சக்கரவர்த்தி, ராஜேஷ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தீபன் சக்கரவர்த்தி, ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் சரவணனை கொலை செய்து கல்லை கட்டி கல்குவாரியில் தள்ளிவிட்டுள்ளனர்.

பின்னர் 26-ந்தேதி மூர்மார்க்கெட்டில் ஒரு பழைய செல்போனை வாங்கியுள்ளனர். தீபன் சக்கரவர்த்தி மற்றும் பார்த்திபன் ஆகியோர் புதுச்சேரி சென்று சரவணனின் சிம் கார்டை அந்த செல்போனில் போட்டு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து உள்ளனர். சரவணன் உயிரோடு இருப் பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் நாம் தப்பித்துவிடலாம் என குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். 3 பேரும் பணத்திற்காக தனது நண்பனையே கடத்தி சென்று கொலை செய்ததும் தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்