தர்மபுரி மாவட்டத்தில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க விவசாயிகள் கணக்கெடுப்பு பணி இன்றும், நாளையும் நடக்கிறது

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

Update: 2019-02-08 22:15 GMT
தர்மபுரி,

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்கு கணக்கெடுப்பு பணி கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, செல்போன் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலம் குறித்த விவரம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கணக்கெடுப்பில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிதியுதவி 3 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த கணக்கெடுப்பு பணி தர்மபுரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய விவசாயிகள் இந்த கணக்கெடுப்பிற்கு உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கலெக்டர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்