ரூ.1¾ கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கலெக்டர் ராஜாமணி தகவல்

திருச்சியில் ரூ.1¾ கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Update: 2019-02-08 22:45 GMT
திருச்சி, 

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு குழந்தைகள் போக்குவரத்து பூங்கா உள்ளது. இந்த பூங்காவை ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராஜாமணி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் பொதுமக்களின் பங்களிப்பு ரூ.58 லட்சமாகும். கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த பூங்காவில் திருச்சி நகரில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய பயிற்சி செயல்விளக்கத்துடன் அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் நடத்தப்படும்.

இருசக்கர வாகனங்களை எப்படி ஓட்டவேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சாலை போக்குவரத்து விதிமுறைகளை பொறுத்தவரை ஏ முதல் இசட் வரை அனைத்தும் கற்றுத்தரப்படும். இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறும். எனவே பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு இந்த பூங்கா சுற்றுலா நோக்கிலும் பயன்படும். இந்த பூங்காவை பராமரிக்கும் பொறுப்பை திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் நிஷா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்