பவானிசாகர் அருகே பெண் படுகொலை: வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் கொன்றேன் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பவானிசாகர் அருகே பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு வாலிபருடன் பழகியதால் கொன்றதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Update: 2019-02-08 23:30 GMT

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் குமரன்கரடு பகுதியை சேர்ந்தவர் மணி. தொழிலாளி. இவருடைய மனைவி தேவி (வயது 45). இவர்களுக்கு புவனேஸ்வரி (24) என்ற மகளும், புருஷோத்தமன் (21) என்ற மகனும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணியை விட்டு பிரிந்து அதே பகுதியில் ஒரு வீட்டில் தேவி வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தேவியின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது தலையில் கல்லைப்போட்டு தேவி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவருடைய உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கல் ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கொலை செய்த நபரை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே தேவியை கொலை செய்ததாக மண்கரடு பகுதியை சேர்ந்த மற்றொரு மணி (47) என்பவர் இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரி மனோகரனிடம் சரண் அடைந்தார். உடனே அவரை பவானிசாகர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி மனோகரன் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து மணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசாரிடம் மணி கொடுத்த வாக்குமூலம் வருமாறு:–

நான் வாழைக்காய் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறேன். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த தேவிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் நாங்கள் 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இந்த நிலையில் தேவிக்கும் வேறொரு வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்தேன். ஆனால் அவர் அந்த தொடர்பை விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சம்பவத்தன்று தேவியின் வீட்டுக்கு சென்றேன். அங்கு தூங்கி கொண்டிருந்த அவர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்து இக்கரைதத்தப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.

மேற்கண்டவாறு போலீசில் அவர் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்