மோடி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயற்சி

நாகையில் மோடி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-08 22:30 GMT
நாகப்பட்டினம், 

நாகை வெளிப்பாளையம் பெருமாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகள் வனிதா(வயது33). இவர் நாகை புதிய பஸ் நிலையம் எதிரே கமலம் தொண்டு நிறுவனம் சேலம் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, அகஸ்தியம்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு புயல் நிவாரணம் வழங்குவதாக கூறி வனிதா சென்றார்.

பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்ற வனிதா தனது “விசிட்டிங் கார்டை“ மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கொடுத்து மோடி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களை நாகையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வனிதா வர கூறினார். அலுவலகத்துக்கு வரும் போது ஆதார் கார்டு, குடும்ப அட்டை, புகைப்படம், ரூ.200 எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

இதனால் அந்த தொண்டு நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வனிதா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வனிதா மற்றும் அவருடன் இருந்த வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதியை சேர்ந்த அபிநயா (20), பெருமாள் வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (40), புத்தூர் ஆர்ச் தெருவை சேர்ந்த ஹரி(22) ஆகியோரை நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மோடி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளிப்பாளையம் போலீசார் வனிதா, அபிநயா, கார்த்திகேயன், ஹரி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிநயா நேற்று தான் வேலைக்கு சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்