முகாமை காலி செய்து விட்டு வனப்பகுதியை நோக்கி செல்லும் சின்னதம்பி யானை பின்தொடர்ந்து செல்லும் வனத்துறையினர்

உடுமலை அருகே முகாமிட்டு இருந்த சின்னதம்பி யானை தனது முகாமை காலி செய்து விட்டு, வனப்பகுதியை நோக்கி தானாக செல்கிறது. அந்த யானையை பின் தொடர்ந்து வனத்துறையினர் செல்கிறார்கள்.

Update: 2019-02-08 22:45 GMT

மடத்துக்குளம்,

கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை, அங்கிருந்து பொள்ளாச்சி பகுதிக்குள் நுழைந்து போக்குகாட்டி வந்தது. அதன்பின்னர் அந்த யானை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது. அங்கிருந்து வேறு பகுதிக்கு போகமறுத்த சின்னதம்பி யானை, உண்டு, உறங்கி காலத்தை கடத்தியது.

சகல வசதிகளுடன் முகாமிட்டு இருந்த, சின்னதம்பி யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட, கலீம் மற்றும் மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகளால், சின்னதம்பி யானையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. இந்த 2 கும்கிகளும், சின்னதம்பி யானையுடன் சேர்ந்து கும்மாளமிட்டது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியும், மேலிடத்து உத்தரவு அவர்களுக்கு கிடைக்காததால் சின்னதம்பி யானையை பிடிக்கவில்லை. இதற்கிடையில் சின்னதம்பி யானை கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள கரும்பு மற்றும் நெல் வயல்களை சேதப்படுத்தியது. இன்னும் ஒரு மாதத்தில் கரும்பு அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், சின்னதம்பி யானை, அவற்றை அழித்து தொடர்ந்து நாசம் செய்வது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல்வயல்களையும் சின்னதம்பி யானை விட்டு வைக்கவில்லை. அவற்றை மிதித்து நாசமாக்கி வருகிறது. எனவே சின்னதம்பி யானையை எப்படியாவது வனப்பகுதிகளுக்குள் விரட்டுங்கள், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் இருந்து புறப்பட்ட சின்னதம்பி யானை, அமராவதி புதுவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு முகாமிட்டது. அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கரும்புக்காடு வழியாக வனப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது. அதன்படி அமராவதி புதுவாய்க்கால், கணேசபுரம், நீலம்பூர், மடத்துக்குளம் ரெயில்வே கேட், மடத்துக்குளம் ரெயில் நிலையம், அமராவதி ஆறு வழியாக கண்ணாடிபுத்தூர் பகுதிக்கு சென்று சேர்ந்தது.

பின்னர் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள், இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருப்பதாகும். இந்த கரும்பு தோட்டத்தை சின்னதம்பி யானை அழித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது. மேலும்அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து, வாழைக்குலைகளை சுவைத்தது. பின்னர் அந்த பகுதியிலேயே வலம் வந்தது.

அதாவது நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கண்ணாடிபுத்தூரை அடைந்துள்ள நிலையில், சின்னதம்பியை பின்தொடர்ந்து வனத்துறையினர் செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்