கிராமங்களில் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு

கிராமங்களில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

Update: 2019-02-08 22:15 GMT

சிவகங்கை,

மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டபணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்ப அலுவலரும் தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குனருமான மகேசன் காசிராஜன் தலைமையிலும், கலெக்டர் ஜெயகாந்தன் முன்னலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:– கிராமங்களில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அலுவலர்கள் நகர்ப்பகுதி, பேரூராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு கள ஆய்வு பணியை அவ்வப்போது மேற்கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக குடிதண்ணீர் தேவை மற்றும் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்தல் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

மேலும் திட்டப்பணிகள் நடைபெறும் போது தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு பணி செய்து, அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மேலும் பணிகள் காலதாமதமாகாமல் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்