கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-08 23:59 GMT
விருத்தாசலம், 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் சாத்துக்கூடல் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சுகன பூஷ்ணம், இளையராஜா, கண்ணப்பா, சுப்பிரமணியன், வேல்முருகன், கவியரசு, ராஜா, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திடம் இருந்து பணத்தை பெற்றுத்தர அரசு முன் வரவேண்டும், அந்த தொகையை 15 சதவீத வட்டியுடன் பெற்றுத்தர வேண் டும். 5 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வைத்துள்ள நிலுவை தொகை சுமார் ரூ.93 கோடியை உடனே வழங்கிட வேண்டும்.

2017-18-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்த ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் வரை அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து விவசாயிகள் அனைவரும் கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்று தரக்கோரி மனு கொடுப்பதற்காக சப்-கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு சப்-கலெக்டர் இல்லாததால் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அந்தோணி, தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விவசாயிகள், கடந்த மாதம் நடந்த தொடர் போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் கரும்புக்கான நிலுவை தொகை வழங்குவதாக கூறி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் காசோலை வழங்கினர். ஆனால் அந்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்று அதிகாரிகளிடம் கேட்டபோது, கணக்கில் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அந்தோணி, இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அவரிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக நிருபர்களுக்கு அய்யாக்கண்ணு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்க்கரை ஆலைகள் 24 மாதமாக தராத நிலுவை தொகையை வசூல் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி கொடுக்க மறுத்தால் சென்னைக்கு சென்று தலைமை செயலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். சட்டசபையிலும் நுழைந்து போராடுவோம். வருகிற தேர்தலில் எந்த கட்சி விவசாயிகளுக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் தருகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த உறுதியை கொடுக்காதவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம். இதனை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி லக்னோவில் ஊர்வலம் வைத்துள்ளோம். அடுத்த மாதம்(மார்ச்) 2-ந் தேதி பிளிப்பர்ட்டில் 10 லட்சம் விவசாயிகளை திரட்டி விவசாயிகளுக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் தருகிற கட்சிக்கு ஓட்டு போடவும், மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடக்கூடாது எனவும் வலியுறுத்தி பிரசாரம் செய்ய உள்ளோம். டெல்லியில் மார்ச் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதனை வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்காக 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்