எத்தனை முறை மோடி வந்து சென்றாலும் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு

எத்தனை முறை பிரதமர் மோடி வந்து சென்றாலும் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது என்று சேலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-02-09 23:00 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஆதித்தமிழர் பேரவையின் வெள்ளி விழா ஆண்டையொட்டி அருந்ததியர் அரசியல் மாநாடு நேற்று மாலை நடந்தது. இதற்கு பேரவை நிறுவன தலைவர் அதியமான் தலைமை தாங்கினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, சு.முத்துசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாடு நிறைவு பேரூரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அருந்ததியர்கள், திராவிடர்கள் என வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் சிந்தனைகளும், கொள்கைகளும் ஒன்று தான். தாழ்த்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனைவரும் திராவிட இயக்கத்தால் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. அரசியல் ரீதியாகவோ அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் நான் உங்களை சந்திக்க வரவில்லை. எப்போதும் உங்களோடு ஒருவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. அதாவது, 2008-ம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, அவர்களது கோரிக்கையை ஏற்று சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முன்வடிவம் கொடுத்தார். இதுபற்றி கவர்னர் உரையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் கருணா நிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் சட்டசபைக்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது துணை முதல்-அமைச்சராக நான் இருந்ததால் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சட்டசபையில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேறி உள்ளனர்.

ஆனால் அந்த 3 சதவீதம் உள்இடஒதுக்கீட்டை தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம். அது இடைத்தேர்தல் அல்ல. பொது தேர்தலாகவும் கூட இருக்கலாம். அதன்பிறகு தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் அருந்ததியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

அடிதட்டு மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலை இல்லை. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. மத்தியில் நடப்பது மோடி அரசு அல்ல. அது மோசடி அரசாகும். ஏனென்றால் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. இதனால் டெல்லியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள். இது நாட்டிற்கே அவமானம்.

தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்து சென்றாலும், இங்கு அவர்களால் (பா.ஜனதா) காலூன்ற முடியாது. ஏனெனில் அவர்களுக்கு காலே இல்லை. நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளார்கள். அது தேர்தலில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் லஞ்சம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு சலுகை அளிக்கலாம். ஆனால் உயர் சாதி யினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை ஒருபோதும் ஏற்க முடியாது.

பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி நடத்தவில்லை. அவர் கம்பெனி நடத்தி வருகிறார். கார்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி நடக்கிறது. அவர்களை போல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் கூலிப்படை ஆட்சி நடத்தி வருகிறார். அதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது ஊழல், கமிஷன், கரப்சன், கொள்ளை மட்டுமில்லாமல் கூடவே கொலையும் நடக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவ்வப்போது கோடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்கு ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொலையை மறைக்க மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு இந்த கொலைகளில் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட நபர்களே வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் விளக்கம் ஏதும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

ஜெயலலிதாவின் கார் டிரைவரான எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது சகோதரர் தனபால் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனவே, அ.தி.மு.க.ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தீரன் சின்னமலையின் படைத்தளபதியாகவும், அருந்ததியர் மக்களின் விடுதலை போராட்ட வீரராகவும் திகழ்ந்த பொள்ளானுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவிடம் அமைக் கப்படும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்