தோவாளை இரட்டைக்கொலை: கைதான 5 பேரை 2 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு

தோவாளை இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

Update: 2019-02-09 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன்(வயது 55), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.கடந்த 31-ந் தேதி இவர்கள் வீட்டில் இருந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து முத்துவையும், கல்யாணியையும் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சொத்து தகராறு காரணமாக கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிபடையை ஏவி இரட்டை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலி படையினரையும் தேடி வந்தனர்.

வழக்கில் தேடப்பட்டு வந்த சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். கூலிப்படையை சேர்ந்த சகாயசாஜூ ஜெனிஸ்(24), ராஜ்குமார்(32), ராஜா(35), அய்யப்பன்(25) ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கோர்ட்டில் சரண் அடைந்த 5 பேரையும் ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது, 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி, கைது செய்யப்பட்ட 5 பேரையும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். அத்துடன், 5 பேரையும் திங்கட்கிழமை மாலை 3 மணிக்குள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்