காந்தி மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2019-02-09 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்கள், சாலையை ஆக்கிரமித்து படிக்கட்டு கட்டியும், கட்டிடங்கள் கட்டியும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே, எங்கெல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட, முன்கூட்டியே அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

திருச்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட காந்திமார்க்கெட் சப்-ஜெயில் ரோடு, இரும்புக்கடை பகுதி, வெங்காயமண்டி கடைகள் உள்ள பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கனவே நோட்டீசு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கடைக்காரர்கள் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை.

இந்த நிலையில் நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆல்பர்ட் தலைமையில் பணியாளர்கள் சென்றனர்.

அங்கு காந்திமார்க்கெட் பகுதியில் செயல்படும் இரும்புக்கடை மற்றும் வெங்காயமண்டி பகுதிகளில் சாலையோரங்களில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவர்கள், தார்பாய் ஷெட்டுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. அப்போது சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றிட அவகாசம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில், ‘ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டது’ என்று கூறி ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்