பெங்களூருவில் புதிய நிறுவனங்கள் தொடங்கி வேலை கொடுப்பதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி வாலிபர் கைது; உடந்தையாக இருந்த ரவுடியும் சிக்கினார்

பெங்களூருவில், புதிதாக நிறுவனங்கள் தொடங்கி வேலை கொடுப்பதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்த வாலிபரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ரவுடியையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-10 23:00 GMT
பெங்களூரு, 

பெங்களூரு மாநகர தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் வேலை கொடுப்பதாக கூறி பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த ரவுடியையும் சுப்பிரமணியபுரா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உத்தரஹள்ளியில் உள்ள கவுடனபாளையாவை சேர்ந்த தர்ஷன் (வயது 32) மற்றும் பி.டி.எம். லே-அவுட் 11-வது கிராசில் வசித்து வரும் ரவுடி சண்முகா (46) என்பது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ஒரு கார், மடிக்கணினி, செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு தர்ஷன் தனது மனைவி நிகிதாவுடன் சேர்ந்து சஞ்சித் என்பவரின் உதவியுடன் அமெரிக்காவில் டி.என்.எஸ். பிரைம் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் கிளைகளையும், புதிதாக கால்சென்டர் நிறுவனங்களையும் பெங்களூரு நகர் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கோவா ஆகிய இடங்களில் தொடங்க இருப்பதாக தர்ஷன் பொதுமக்களிடம் கூறினார். மேலும், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனங்களில் இருந்து ‘புராஜெக்ட்டுகள்’ வாங்கி வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை நம்பியவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலை கொடுப்பது போன்று அவர் போலியான இ-மெயில்கள் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதுபற்றி அறிந்த அவர்கள் தங்களின் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அப்போது, ரவுடி சண்முகாவை வைத்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்கள் மீது சுப்பிரமணியபுரா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர். கைதான 2 பேரும் எத்தனை பேரிடம் இருந்து பணம் வசூலித்து எத்தனை கோடி மோசடி செய்துள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்