வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு

வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.

Update: 2019-02-10 23:00 GMT
வரதராஜன்பேட்டை, 

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை அருகே ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி காந்திமதி. இருவரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் தனிதனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு 2 மாதத்துக்கு ஒரு முறை கணவன்- மனைவி இருவரும் சென்று வருவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவிற்கு சென்றனர். இந்நிலையில் திருஞானசம்பந்தம் வீட்டின் அருகே வசிக்கும் உறவினர், அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

நகை- பணம் திருட்டு

இதுகுறித்து பெங்களூருவில் இருந்த திருஞானசம்பந்தத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பெங்களூருவில் இருந்து வந்த திருஞானசம்பந்தம் வீட்டின் அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்