ரூபநாராயணநல்லூர் ஏரி வறண்டது நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

ரூபநாராயணநல்லூர் ஏரி வறண்டதால் நெற்பயிர்கள் கருகுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-02-10 22:31 GMT
விருத்தாசலம், 

மங்கலம்பேட்டை அருகே ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை நிர்வாகம் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனால் வெறும் பெயரளவிற்கே தூர்வாரப்பட்டது. மழைக்காலத்தில் ஏரியில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி, விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

மழைக்காலத்தில் ஏரியில் தேங்கிய நீரை பயன்படுத்தி விவசாயிகள் அப்பகுதியில் நெல்நாற்று நட்டு பயிர் செய்தனர். நடவு நட்டு சுமார் 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது நெற்பயிர்கள் பூ பூக்கும் தருவாயில் உள்ளது. ஆனால் ஏரியில் தேங்கியிருந்த சிறிதளவு மழை நீரும் படிப்படியாக வற்ற தொடங்கியது.

இருப்பினும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டதால் விவசாயிகள் வேறு வழியின்றி ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கி இருந்த தண்ணீரை என்ஜின் மோட்டார் மூலம் உறிஞ்சி, தங்களது வயல்களுக்கு பாய்ச்சினர். தற்போது ஏரி தண்ணீரின்றி வறண்டது. இதனால் நெற்பயிர்கள் கருகியுள்ளன. மேலும் சில வயல்களில் கருகும் நிலையில் உள்ளன.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் ஏரி பாசனத்தை பயன்படுத்திதான் நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். கடந்த பருவமழையின் போது பெய்த மழையால் சிறிதளவு தண்ணீர் ஏரியில் தேங்கியது. அதனை பயன்படுத்தி ஒரு போகம் விவசாயம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றிவிட்டது.

இதனால் மிக நீண்ட தூரத்தில் உள்ள அகரம், விஜயமாநகரம், வடவாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பாசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. போதிய தண்ணீரின்றி பல வயல்களில் நெற்பயிர்கள் கருவி விட் டன. எனவே அதிகாரிகள், இந்த பகுதியை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்