டி.என்.சி. சான்றிதழை டி.என்.டி.யாக மாற்றுவது குறித்த ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

டி.என்.சி. சான்றிதழை டி.என்.டி. சான்றிதழாக மாற்றுவது குறித்த ஆய்வுக்குழு கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2019-02-10 22:45 GMT

சிவகங்கை,

சீர்மரபினர் சமுதாயத்தினர்(டி.என்.சி.) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர்(டி.என்.டி.) என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பான ஆய்வுக்குழு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக்குழு தலைவரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் நிர்வாக முதன்மை செயலாளருமான அதுல்யாமிஸ்ரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் வருவாய் நிர்வாக இணை ஆணையர் லட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் மதிவாணன், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குனர் சம்பத் மற்றும் சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சமுதாய தலைவர்கள் 27 பேர் தங்களது கோரிக்கை குறித்த கருத்துகளை தெரிவித்து மனுக்களாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆய்வுக்குழு தலைவர் அதுல்யாமிஸ்ரா பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீர்மரபினர் தங்களது சமுதாயத்தை சீர்மரபினர் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த கோரிக்கை குறித்து சமுதாய மக்களிடம் ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்விதமாக குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள முதல்–அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தற்போது இக்குழு ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள சமுதாய மக்களிடம் தங்களின் சூழ்நிலை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பு, உயர்கல்வி பெறுதல் போன்றவற்றில் ஏற்படும் இடையூறுகள் குறித்து கேட்டறியப்பட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் இப்பணி நடக்கிறது. இக்குழு குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, தேவையான விளையாட்டு பயிற்சி போன்றவற்றை சரியாக வழங்கிட ஆராய்ந்து அதற்குரிய கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. பெறப்பட்ட அறிக்கைகளை உரிய ஆவணங்களுடன் முதல்–அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர்களின் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு ஆலோசனை குழுத்தலைவர் அதுல்யாமிஸ்ரா தலைமையில் குழு உறுப்பினர்கள் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சுந்தரநடப்பு ஊராட்சியில் ஆய்வு செய்து, சீர்மரபினர் மக்களிடம் நேரடியாக சென்று தங்களுக்குள்ள பொருளாதார பின்னடைவு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கையை பதிவு செய்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருவாசகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்