விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் 6 நோயாளிகள் பயன்பெற்றனர்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 நோயாளிகள் பயனடைந்தனர்.

Update: 2019-02-10 23:15 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர்கள் ராமதாஸ், அன்னக்கிளி தம்பதியினர். இவர்களுக்கு 4 குழந்தைகள். ராமதாஸ் கொத்தனராக வேலை பார்த்து வருகிறார். இவரது கடைசி மகன் விக்னேசுவரன் (வயது21) டிப்ளமோ படித்துள்ளார். இந்த நிலையில் விக்னேசுவரன் கடந்த 2–ந்தேதி இரவு பட்டணம்காத்தான் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார். இதில் விக்னேசுவரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 6 நாட்கள் தொடர் மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விக்னேசுவரன் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த கொத்தனார் ராமதாஸ் தனது மகன் மூளைச்சாவு நிலையில் இருப்பதை உணர்ந்து அவனது உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும் வகையில் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தார்.

மேலும் இதுகுறித்து அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து விக்னேசுவரனின் இருதயம், கண், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை தானமாக எடுத்து சுமார் 6 நபர்களுக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். தனது மகனின் உயிர் பிரிந்தாலும் உயிருக்காக போராடும் 6 பேரை காப்பாற்ற எண்ணிய ராமதாசின் எண்ணத்தையும் செயலையும் அறிந்து அனைவரும் பாராட்டினர். மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்ததால் தனியார் மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டதுக்கு பணம் ஏதும் பெறாமல் விக்னேசுவரனின் உடலை சொந்த ஊரான ராமநாதபுரம் கொண்டு வந்து தகனம் செய்யும் வரை அனைத்து செலவுகளையும் மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது. கிராமத்தில் வாழ்ந்து வரும் ராமதாஸ் போன்றவர்கள் உடல் உறுப்பு தானம் செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று இருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.

மேலும் செய்திகள்