மதுரை அருகே ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலையில் கள்ளக்காதலி கைது

மதுரை அருகே அழகர்கோவில் விடுதியில் நடந்த ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கள்ளத்காதலி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-10 23:00 GMT

மதுரை,

விருதுநகர் இந்திராநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 68). ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 3–ந் தேதி மதுரை அருகே உள்ள அழகர்கோவிலுக்கு வந்துள்ளார். அவருடன் 45 வயது மதிக்கத்தக்க பெண், 12 வயது சிறுமி, 11 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் வந்தனர். அழகர்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் தங்கிய அறை நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது தங்கராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் வந்த பெண் உள்பட 3 பேரும் அங்கு இல்லை. இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் பெண் ஒருவருக்கும், தங்கராஜூக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அந்த பெண்ணும், அவருடைய மகன், மகளும் மதுரைக்கு வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த பெண்தான், தங்கராஜை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சென்னை, விருதுநகர், நெல்லை பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது நெல்லை அருகே முக்கூடல் கிராமத்தில் அந்த பெண் பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அங்கு சென்ற தனிப்படையினர் அந்த பெண்ணை செய்து விசாரித்தனர்.

இதில் அவரது பெயர் நாகேஸ்வரி(35), காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இவருக்கும், தங்கராஜிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. தங்கராஜை கொலை செய்ததாக நாகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக தங்கராஜை கொலை செய்தார்? வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்