திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கணினி திருடிய அரசு ஊழியர் கைது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணினியை திருடிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முன்விரோதத்தில் மொபட்டுக்கு தீவைத்தது அம்பலானது.

Update: 2019-02-11 23:15 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு பகல், இரவு இரு வேளைகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதே தளத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு போலீசார் சுழற்றி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி இரவு கலெக்டர் அலுவலகத்தில் இரவு பாதுகாவலர் ராஜேந்திரன் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நள்ளிரவு கலெக்டர் அலுவலக வாசல் கதவை தட்டி ஒருவர் முக்கிய ஆவணங்களை எடுத்து வர உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாவலர் கதவை திறந்து விட்டு உள்ளே அனுமதியளித்துள்ளார். சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக பின்பக்க வாசல் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாவலர் ராஜேந்திரனுக்கு சொந்தமான மொபட் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன் மொபட்டில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளார்.


இதற்கிடையில் கருவூல அலுவலகத்தில் இருந்த கணினியும் காணவில்லை. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மொபட்டை தீவைத்து எரித்து, கணினி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை துறையில் உதவியாளராக பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கனக்கன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (38) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலக இரவு பாதுகாவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.


இந்தநிலையில் முன்விரோதம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து ராஜேந்திரன் மொபட்டுக்கு தீவைத்து விட்டு, இதை திசை திருப்ப கருவூலத்தில் இருந்த கணினியை திருடி சென்றதாக பூபதி ஒப்பு கொண்டார்.

இதையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் பூபதியை கைது செய்து, அவரிடம் இருந்த கணினியை பறிமுதல் செய்தனர். விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த திருவாரூர் தாலுகா போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு துரை பாராட்டினார்.

மேலும் செய்திகள்