அதிகாரிகள் குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அரசு செயலர் வெங்கடேசன் அறிவுரை

அரசுத்துறை அதிகாரிகள் குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசு செயலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Update: 2019-02-11 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் பணிகள் மற்றும் வறட்சி நிவாரண பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர். வெங்கடேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் வெங்கடேசன் பேசியதாவது:-

தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் நிதி வழங்கி செயல்பட்டு வருகிறது. அரசு துறைகளுக்கு வழங்கப்பட்ட நிதியை வளர்ச்சி பணிகளுக்கு சிறப்பாக பயன்படுத்துவதோடு, குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல நகராட்சி, பேரூராட்சிகளில் நாள்தோறும் வழங்க கூடிய குடிநீர் அளவு, உள்ளூர் ஆதாரம் மூலம் வழங்க கூடிய குடிநீர் அளவு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் அளவு மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்க கூடிய குடிநீர் அளவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பொதுமக்களுக்கு கோடைக்காலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் வழங்கும் பணிகளை சீராக வழங்க வேண்டும். மேலும் மின் மோட்டார்கள், விசை பம்புகள் , தெருவிளக்குகள் பழுதடைந்தால் மண்டல அளவிலான அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனுக்குடன் பழுதுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தேன்கனிக்கோட்டை ,அஞ்செட்டி, பெட்டமுகிலாளம், தளி ஆகிய மலைப்பகுதிகளில் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கும் குடிநீர் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல அளவிலான அலுவலர்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பயன்பாடு குறித்தும், பொது மக்களின் கோரிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடடிக்கை குறித்தும் அறிக்கையினை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குடிநீர் பணிகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, ராஜசேகர், உதவி பொறியாளர்கள் பன்னீர் செல்வம், சேகர், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் ,தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்