சேலம்-கரூர் பாதை மின்மயம்: மின்சார என்ஜினில் 4 ரெயில்கள் இயக்கம்

சேலம்-கரூர் அகல ரெயில் பாதை மின்மயக்கப் பட்டதால் மின்சார என்ஜினில் 4 ரெயில்கள் இயக்கப்பட்டன.

Update: 2019-02-11 22:15 GMT
சூரமங்கலம், 

சேலம் ரெயில்வே கோட்டத்தில் ஈரோடு-திருச்சி, கரூர்-திண்டுக்கல், சேலம்-கரூர் ரெயில்வே பாதைகளை மின்மயமாக்க ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு- திருச்சி, கரூர்-திண்டுக்கல் ரெயில்வே பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதே போல சேலம்-கரூர் அகல ரெயில்பாதையில் மின்மயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்தது. இதனால் மின்சார என்ஜின் மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் ரெயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக முடிந்தது. எனினும் டீசல் என்ஜின் மூலமாகவே ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சேலம்- கரூர் வழித்தடத்தில் டீசல் என்ஜினில் இயக்கப்பட்டு வந்த 4 ரெயில்கள் மின்சார என்ஜின் ரெயிலாக மாற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 4 ரெயில்கள் டீசல் என்ஜினுக்கு பதிலாக, மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டன. இதன்அடிப்படையில் தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில், நெல்லை-ஜெபல்பூர் விரைவு ரெயில் மின்சார என்ஜினில் இயக்கப்பட உள்ளது என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பயணிகளின் வசதிக்காக சேலம்- கரூர் வழித்தடத்தில் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்