சாலை அமைக்க வலியுறுத்தி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

சாலை அமைக்க வலியுறுத்தி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-11 22:00 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய கிணறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பெரியகிணறு பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தார்சாலை முழுவதும் இடிக்கப்பட்டது. இதனால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அதே இடத்தில் புதிய தார்சாலை அமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குண்டும், குழியை சமப்படுத்தாமல் அப்படியே சாலை அமைத்தால் சாலை உயரமாகவும், அங்கு உள்ள வீடுகள் அனைத்தும் பள்ளத்தில் இருக்கும். இதனால் மழைநீர், சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடும்.

எனவே பழைய சாலையில் உள்ள கற்கள், மண் அனைத்தையும் அகற்றி, சாலையை சமன்படுத்தி விட்டு அதன் பிறகு தார்சாலை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை. இதை கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சா லை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜெயராஜ், போ ராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையொட்டி அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை உதவி ஆணையாளர் ஜெயராஜிடம் வழங்கினர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்