விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு எதிரொலி, கொடைக்கானலில் கடையடைப்பு போராட்டம்

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானலில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2019-02-11 22:45 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர் பகுதியில் ‘மாஸ்டர் பிளான்‘ என்னும் முழுமை திட்டம் அமலில் உள்ளது. இதன்படி இங்கு தரைதளம் மற்றும் முதல்தளம் சேர்த்து 7 மீட்டர் உயரத்திற்குள் மட்டுமே கட்டிடங்கள் கட்ட வேண்டும். இதற்கான சட்டம் கடந்த 1993-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திட்டம் மறுவரையறை செய்யப்பட வேண்டும். ஆனால் 26 ஆண்டு காலமாக இதுவரை ‘மாஸ்டர் பிளான்‘ புதுப்பிக்கப்படவில்லை. இதனால் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் பல கட்டிடங்கள்கட்டப்பட்டு வந்தன.

இவ்வாறு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் முதல்கட்டமாக 63 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 1,415 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் கொடைக் கானல் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக் கப்படுவார்கள் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், மாஸ்டர் பிளான் என்னும் முழுமை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொடைக் கானல் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.

அதையொட்டி கொடைக் கானல் நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் அமைந்து உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டு இருந்தன. இதை அறியாமல் நேற்று கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் திறக்கப்படாததால் மிகவும் அவதியடைந்தனர். அத்துடன் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சுற்றுலா பகுதிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதன் காரணமாக நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்