நாகை அருகே அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரி கண்டுபிடிப்பு 2 பேர் கைது; லாரி பறிமுதல்

நாகை அருகே அனுமதியின்றி செயல்பட்ட மணல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-02-11 23:15 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் நாகூர் வெட்டாற்று பாலம் அருகே நாகை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை நடத்தினர்.

இதில் ஆறுகளில் இருந்து மணலை அள்ளி கீழ்வேளூர் அருகே கோகூரில் உள்ள ஒரு இடத்தில் சேமித்து வைத்து அனுமதியின்றி மணல் குவாரி நடத்தியதும். இங்கிருந்து லாரியில் மணலை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

பின்னர் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்தது பனைமேடு காலனி தெருவை சேர்ந்த ரஜினிகாந்த் (வயது 39), அனுமதியின்றி மணல் குவாரி நடத்தி வந்த கீழ்வேளூர் காந்தி நகரை சேர்ந்த மகேஷ் (40) என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் அனுமதியின்றி செயல்பட்ட மணல்குவாரியை போலீசார் பார்வையிட்டனர். மேலும், லாரியின் உரிமையாளரான சிக்கல் தெற்குவீதியை சேர்ந்த அசோக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்