செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-11 22:15 GMT
செய்யாறு, 

செய்யாறு அருகே உள்ள தண்டரையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் செய்யாறு - ஆரணி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமப்படுகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்