முன்விரோதம் காரணமாக பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை

முன்விரோதம் காரணமாக பெயிண்டரை கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-02-11 22:45 GMT
சிங்காநல்லூர், 

கோவை புலியகுளம் சிறுகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் லியோ மார்ட்டின் (வயது 28), பெயிண்டர். இவரும், கொண்டசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த தருண் என்ற இன்பென்ட்ராஜ் (24), விக் என்ற சண்முகம் (23) ஆகியோரும் சேர்ந்து பெயிண்ட் அடிக்க செல்வது வழக்கம்.

இதனால் நண்பர்களான அவர்கள் 3 பேரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த மாதம் 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது லியோ மார்ட்டின், தருணிடம் சிகரெட் மற்றும் கஞ்சா வாங்கி வரும்படி கூறினார். ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த லியோ மார்ட்டின் தருணை தாக்கி உள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு லியோ மார்ட்டின் அலமேலு மங்கம்மாள் லே-அவுட் வழியாக நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த தருண், சண்முகம் ஆகியோர் சேர்ந்து லியோ மார்ட்டினை வழிமறித்து தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லியோ மார்ட்டின் அவர்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனே தருண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லியோ மார்ட்டினை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லியோ மார்ட்டினை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தருண், சண்முகம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் மேலும் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட லியோ மார்ட்டின் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் அவர் தன்னை ரவுடி என்று கூறிக் கொண்டு செயல்பட்டுள்ளார். தருண், சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து லியோ மார்ட்டினும் கஞ்சா பயன்படுத்தி வந்து உள்ளார். சம்பவம் நடந்தபோது அவர் கள் 3 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாகத்தான் இந்த கொலை நடந்து உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்