வெள்ளாளபட்டியில் நிவாரண தொகை வழங்குவதில் குளறுபடி அதிகாரியிடம் பொதுமக்கள் மனு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெள்ளாளபட்டியில் நிவாரண தொகை வழங்குவதில் குளறுபடி நடந்து உள்ளதாக பொதுமக்கள் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

Update: 2019-02-11 23:00 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, விலையில்லா வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 580 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 316 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி வழங்கினார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், காமராஜபுரம், ஆசிரியர் காலனி, போஸ்நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நிவாரண பொருட்களும், நிவாரண தொகையும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல் எடுத்த பின்பு நிவாரண தொகை வழங்காதது ஏன்? என விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

உபயோகிப்பாளர் சமூக நல பாதுகாப்புக்குழு உதவி தலைவர் பாலகிருஷ்ணன் கொடுத்த மனுவில், விவேகானந்தநகர் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். பல்லவன் விரைவு ரெயிலை குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 37 கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்களில் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர், ஆவூர் பிரிவு சாலையில் மறியல், தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என கூறியிருந்தார்.

புதுக்கோட்டை போஸ்நகர் பகுதியை சேர்ந்த சுதா என்பவர் கொடுத்த மனுவில், போஸ்நகர் 9-ம் கடைவீதியில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்த நீர் 6 மாதகாலமாக வருகிறது. மேலும் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக காவிரி குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

விராலிமலை தாலுகா கொடும்பாளூர் பகுதியை சேர்ந்த காந்தியவாதி செல்வராஜ் கொடுத்த மனுவில், நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு வழங்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் சத்திரம் ஊரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் பத்திர பதிவு ரசீது போன்றவை வழங்கப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பொன்னமராவதி தாலுகா ஒலியமங்கலம் வெள்ளாளபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே முறையாக ஆய்வு நடத்தி உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் புயல் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல அறந்தாங்கி தாந்தோணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, மீளமுடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களுக்கு இதுவரை தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்களும், நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதி மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குளத்தூர் தாலுகா கோட்ரப்பட்டியை சேர்ந்த ஜெயராமன் கொடுத்த மனுவில், நான் கண்பார்வை இல்லாதவன். எனது வீடு கஜா புயலினால் முற்றிலும் சேதமடைந்தது. எனக்கு தமிழக அரசின் 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் வீடு சேதமடைந்ததற்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கு நிவாரண தொகை கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்