ராசிபுரம் அருகே கல்லவழி கருப்பணார் கோவில் திருவிழா பக்தர்களுக்கு சமபந்தி விருந்து

ராசிபுரம் அருகே கல்லவழி கருப்பணார் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு கறியுடன் சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது.

Update: 2019-02-11 22:00 GMT
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற கல்லவழி கருப்பணார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தை மாதம் கடைசி வாரத்தில் முப்பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் இந்த ஆண்டும் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கருப்பணாருக்கு சிறப்பு பூஜை செய்து ஆடு, பன்றி, கோழி பலியிடப்பட்டது. இரவில் சுடுவான் பூஜை செய்து காவு சோறு போடப்பட்டது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக ஆடு, பன்றி, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். 500 கிலோ ஆடு, கோழி, பன்றி இறைச்சியை பெரிய பாத்திரங்களில் சமைத்தனர். மேலும் 500 கிலோ பச்சரிசி கொண்டு சாதம் செய்து அதனை உருண்டையாக பிடித்து பக்தர்களுக்கு விடிய விடிய சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

இந்த சமபந்தி விருந்தில் ராசிபுரம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, வடுகம், சீராப்பள்ளி, பட்டணம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லவழி நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்