பல்கலைக்கழக ஓய்வுபெற்ற அலுவலர் நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்று மோசடி கட்டிட விற்பனையாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு

ஒப்பந்தபடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டாமல் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற அதிகாரி நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்று மோசடி செய்த கட்டிட விற்பனையாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-02-11 22:15 GMT
திருச்சி,

திருச்சி அன்பில் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது61). இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலம் திருச்சி கொட்டப்பட்டில் உள்ளது. திருவானைக்காவல் கணபதிநகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் வி.பி.சீதாராமன். இவர், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யும் புரொமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார்.

கடந்த 10.7.2014-ம் ஆண்டு சீதாராமனுடன், கலைச்செல்வன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது, தனக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்தால் 30 சதவீதம் தனக்கும், 70 சதவீதம் சீதாராமனுக்கும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். எனவே, இதற்கான அனைத்து உரிமைகளையும்(பவர்) கலைச்செல்வன், கட்டிட விற்பனையாளர் சீதாராமனுக்கு எழுதி கொடுத்ததுடன் ரூ.87 லட்சம் ரொக்கமும் கொடுத்துள்ளார்.

ஆனால், 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அந்த நிலத்தில் சீதாராமன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவில்லை. மாறாக, 1.60 ஏக்கர் நிலத்தில் 44 ஆயிரத்து 44 சதுர அடி நிலத்தை, தனது புரொமோட்டர்சை சேர்ந்த 4 பேருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்துக்கு விற்று மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.தனது நிலத்தை விற்பனை செய்ததை அறிந்த கலைச்செல்வன் அதிர்ச்சி அடைந்தார். அடுக்கு மாடி குடி யிருப்பு கட்டுவதற்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டதே தவிர, நிலத்தை விற்பதற்கு கொடுக்கவில்லை என தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த மாதம் 21-ந் தேதி கலைச்செல்வன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது நிலத்தை விற்று மோசடி செய்த கட்டிட உரிமையாளர் சீதாராமன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இன்னொரு இயக்குனரான சுந்தரம் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற மதுரை ஐகோர்ட்டு, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை விசாரிக்க உத்தரவிட்டது. அவர், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், பல்கலைக்கழக ஓய்வு பெற்ற அலுவலர் கலைச்செல்வனுக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்துக்கு விற்று மோசடி செய்த சீதாராமன் மற்றும் சுந்தரம், சுவாமிநாதன், அகோரமூர்த்தி, ஹரிகரன், சீனிவாசன், ஆனந்த் ஆகிய 7 பேர் மீது இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்