கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க மணிக்கணக்கில் காத்து கிடந்த பொதுமக்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனுகொடுக்க வந்த பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.

Update: 2019-02-11 23:00 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின்போது தங்கள் தேவைகளை, குறைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் வந்து மனு கொடுப்பது வழக்கம். இதனால் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

முன்பு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்து வந்த, இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம், கடந்த சில ஆண்டுகளாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலக கட்டிடத்தின் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.

மனு கொடுக்க வருபவர்கள் கூட்ட அரங்கின் கீழ் பகுதியில் உள்ள மனுக்கள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டரில் பதிவு செய்து, பதிவு எண் பெற்று மனுக்கள் வாங்கும் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இதற்காக மனுக்கள் பதிவு செய்யும் கவுண்ட்டரில் நான்கைந்து பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

அதேபோல் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதற்காக காலை 9.30 மணிக்கெல்லாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல அதாவது 10.30 மணிக்கெல்லாம் மனு கொடுக்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அவர்கள் அனைவரும் தங்களது மனுக்களை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்றனர். முதலில் கவுண்ட்டருக்கு வெளியே மேஜைபோட்டு அமர்ந்திருந்த 2 பேர் பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களில் சீல்வைத்து கொடுத்தனர்.

சீல் வைக்கும் இடத்தில் கூட்டம் வேகமாக குறைந்தது. ஆனால் மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கவுண்ட்டரில் மக்களின் கூட்டத்துக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்காததும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மதியம் 12.30 மணிக்கு மேலும் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்டம் குறையவில்லை. மனு கொடுக்க வந்தவர்களில் பலர் முதியவர்களாக இருந்தனர். இதனால் அவர்களால் நீண்டநேரம் நிற்கமுடியவில்லை. இதனால் ஆங்காங்கே தரையில் அமர்ந்திருந்து மனுக்களை பதிவு செய்ய வேண்டிய அவலநிலை காணப்பட்டது. மயங்கி விழும் நிலைக்கு வந்த பல பெண்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவின் சுவற்றில் அமர்ந்து ஓய்வெடுத்ததை காண முடிந்தது.

இதுதான் இப்படி என்றால் மனு கொடுக்கும் இடத்தில் காலை 11.15 மணி வரை கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் மனுவாங்கும் அரங்குக்கு வரவில்லை. சமூக பாதுகாப்புத்திட்ட பெண் அதிகாரி ஒருவர் மட்டுமே அரங்கின் மேடையில் அமர்ந்திருந்தார். அவரிடம் ஒருசிலர் மட்டுமே மனு கொடுத்தனர். பலர் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறி காத்திருந்தனர். 11.15 மணிக்குப்பிறகு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மனுக்கள் வாங்கும் அரங்குக்கு வந்தார். அதன்பிறகு நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் மனு கொடுத்துவிட்டுச் சென்றனர். 12 மணி அளவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வந்தார். அவர் மக்களிடம் சிறிது நேரம் மனுவாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகும் ஏராளமானோர் வெகுநேரம் காத்திருந்து மனுக்களை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக மனு கொடுக்க வந்தவர்களில் சிலர் கூறும்போது, “நாங்கள் கொடுக்கும் மனுக்களில் ஒருசிலவற்றின் மீதுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதே தெரியாத நிலைதான் உள்ளது. இதனால் ஒரு கோரிக்கைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டியதுள்ளது. இதுதான் இப்படி என்றால் மனு கொடுக்க வரும் மக்களுக்காவது தேவையான அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்றால் இல்லை. மனுக்களை பதிவு செய்ய நீண்டநேரம் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பதிவு செய்யும் இடத்தில் போதிய அனுபவமிக்க பணியாளர்களை நியமித்தால் கால்கடுக்க நீண்டநேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படாது“ என்றனர்.

மேலும் செய்திகள்