தோவாளை இரட்டை கொலை: அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு

தோவாளை இரட்டை கொலை வழக்கில் சரண் அடைந்த 5 பேரின் போலீஸ் காவல் முடிந்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-02-11 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55), இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். கடந்த 31-ந் தேதி இரவில் மணிகண்டனின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கணவன்- மனைவி இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சொத்து தகராறு காரணமாக கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலிப்படையும் தீவிரமாக தேடிவந்தனர்.

அப்போது, சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டிலும், கூலிப்படையை சேர்ந்த சகாயசாஜூ ஜெனிஷ்(24), ராஜ்குமார்(32), ராஜா(35), அய்யப்பன்(25) ஆகியோர் நெல்லை கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

அதைதொடர்ந்து 5 பேரையும், போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, சுடலையாண்டி தன்னுடன் சேர்ந்து வாழும் பெண்ணை தரக்குறைவாக பேசியதால் கல்யாணியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் கூலிப்படையை சேர்ந்த ராஜ்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சுடலையாண்டி தோவாளையில் பத்திர அலுவலகம் நடத்தி வந்தார். ஒரு சொத்து சம்பந்தமாக அங்கு சென்றபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் நாளடைவில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அப்போது சுடலையாண்டி தனது தங்கை கல்யாணி சொத்து பிரச்சினை காரணமாக தொல்லை கொடுப்பதை கூறி அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று கூறினார். மேலும், என் மீது உள்ள வழக்குகளை நடத்துவதற்கு உதவுவதாக கூறினார்.

அதனால், எங்களது நட்புக்காக கல்யாணியை கொலை செய்ய ஒப்புக்கொண்டேன். அதன்படி சம்பவத்தன்று நான், 3 பேருடன் சென்று கொலை செய்து விட்டு, சுடலையாண்டியுடன் நெல்லைக்கு தப்பிச் சென்றோம். பின்னர், பெங்களூருவுக்கு தப்பினோம். போலீசார் தேடுவதை தொடர்ந்து சுடலையாண்டி சென்னை கோர்ட்டிலும், நாங்கள் நெல்லை கோர்ட்டிலும் சரண் அடைந்தோம்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

அதைதொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று மாலையில் இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர், அவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே கொலையை அரங்கேற்றிய ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை நேரில் பார்த்த சாட்சி இறந்த கல்யாணியின் மகள் ஆர்த்தி ஆவார். அதனால், ஆரல்வாய்மொழி போலீசார் ஆர்த்தியை வைத்து கொலையாளிகளை அடையாளம் காண அணிவகுப்பு நடத்த முடிவு செய்தனர். அதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரல்வாய்மொழி போலீசார் முறைப்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். 

மேலும் செய்திகள்