ஏர்வாடியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தனர்.

Update: 2019-02-11 22:32 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் ஏர்வாடி பகுதியில் உள்ள 13 கிராம பொதுமக்கள் சார்பில் சரவணன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– ஏர்வாடி ஊராட்சி பகுதியில் வெட்டமனை, சின்ன ஏர்வாடி, சேர்மன் நகர், முத்தரையர் நகர், ஏராந்துரை, தொத்தன்மகன்வாடி, பொன்நகர், நாச்சம்மைபுரம், மெய்யன்வலசை, கல்பார், பி.எம்.வலசை, சடைமுனியன்வலசை, எஸ்.கே.நகர், ஆதஞ்சேரி, கோகுல்நகர், கிருஷ்ணாநகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஏர்வாடியில் புகழ்பெற்ற தர்கா அமைந்துள்ளது.

இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள ஏராளமான விடுதிகளில் தங்குகின்றனர். ஏர்வாடி ஊராட்சியாக இருப்பதால் வரக்கூடிய யாத்ரீகர்களுக்கும், பொதுமக்களுக்கும் முழுமையான சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளதால் ஏர்வாடி பகுதியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தங்கச்சிமடம் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி அளித்த மனுவில், வருகிற மார்ச் மாதம் 15 மற்றும் 16–ந்தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு 460 பாரம்பரிய மீனவர்கள் 20 நாட்டுப்படகுகளில் செல்ல ஆயத்தமாகி வருகிறோம். இதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கையை அடுத்துள்ள திண்டுக்கல் கிராம பொதுமக்கள் சார்பில் உடையான் என்பவர் அளித்த மனுவில், திண்டுக்கல் கிராமத்தில் துளசி முத்துமாரியம்மன் கோவில் கட்டுவதற்கு ஊருக்கு மத்தியில் அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாப்பாகுடி, தொருவளூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் பாகம்பிரியாள் அளித்த மனுவில், தொருவளூரில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொடக்கப்பள்ளியில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த கட்டிடம் தற்போது இடியும் நிலையில் உள்ளது. இதனால் மரத்தடியில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானம் அளித்த மனுவில், பரமக்குடி வைகை ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு குவாரி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்