‘கேட்’ அடிப்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை

இந்திய மின்தொகுப்பு நிறுவனமான பி.ஜி.சி.ஐ.எல்., நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரத்தை பகிர்மானம் செய்யும் அமைப்பாக விளங்குகிறது.

Update: 2019-02-12 12:16 GMT
2018 வரையில் 238 உதவி மின்நிலையங்களுடன், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 64 கிலோமீட்டர் தூரத்திற்கான மின்பகிர்மான சேவையை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் 47 ஆயிரத்து 735 கிலோமீட்டர் தொலைத் தொடர்பு நெட்வொர்க் சேவையும் வழங்குகிறது. கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் 30 ஆயிரத்து 767 கோடி விற்றுமுதல் ஈட்டியிருப்பதுடன், 8 ஆயிரத்து 239 கோடி நிகர லாபம் ஈட்டிய முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

தற்போது நிறுவனத்தில் கேட் தேர்வு அடிப்படையில் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரிக்கல் பிரிவில் 30 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 இடங்களும், சிவில் பிரிவில் 7 இடங்களும் உள்ளன. இவை தொடர்பான என்ஜினீயரிங் பட்டப் படிப்பு படித்து, கேட் 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 31-12-2017-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.powergridindia.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்