தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கத்தை கண்டித்து, பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டம்

வேடசந்தூரில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கத்தை கண்டித்து பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-12 22:30 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 186 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சிலரை பணியிடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. அதன்படி ராஜகோபாலபுரம் தலைமை ஆசிரியர் தியாகராஜனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர்கள் கூறுகின்றனர். மேலும் அவருடைய பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து நேற்று பள்ளி முன்பு போராட்டதில் ஈடுபட்டனர். இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்தநிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கோஷங் களை அவர்கள் எழுப்பினர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மீண்டும் தலைமை ஆசிரியரை பணியில் சேர்க்கவில்லை எனில் மாணவர் களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்