ஸ்டெர்லைட் வழக்கில் விரைவில் தீர்ப்பு: தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் குவிப்பு-பரபரப்பு

ஸ்டெர்லைட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி, தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-02-12 21:30 GMT
தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி, தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை மூடப்பட்டது.

இதை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அமல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

விரைவில் தீர்ப்பு

இந்த மனு மற்றும் அரசின் மேல்முறையீடு மனுவை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன.

எழுத்துப்பூர்வமான வாதங்களும் பெறப்பட்டு உள்ளன. இதனால் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

போலீசார் குவிப்பு

இதையடுத்து தூத்துக்குடியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது, இரும்பு தடுப்புகள் அமைத்து மக்கள் கூடுவதை தவிர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 1,000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் செய்திகள்