ஒளிரும் ஈரோடு அமைப்பு நிதி உதவியில் விளையாடினார் சர்வதேச அளவில் 5–வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் ஈரோடு இனியன்

ஒளிரும் ஈரோடு அமைப்பின் நிதி உதவியில் விளையாடி வரும் செஸ் வீரர் ஈரோடு இனியன் சர்வதேச அளவில் 5–வது கிராண்ட் மாஸ்டர் தகுதியினை பெற்றார்.

Update: 2019-02-12 23:00 GMT

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர் பி.இனியன். சர்வதேச அளவில் 5–வது செஸ் கிராண்ட் மாஸ்டர் தகுதியை பெற்று ஈரோட்டுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார். இவர் சர்வதேச அளவில் மேலும் வெற்றிகள் குவிக்கவும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெறவும் தேவையான உதவிகளை ஒளிரும் ஈரோடு அமைப்பு செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பி.இனியன் பங்கேற்று வரும் அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் செலவு தொகையியை ஒளிரும் ஈரோடு அமைப்பு வழங்கி வருகிறது. அதன்படி இதுவரை ரூ.30 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இளம் செஸ் வீரர் இனியன் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் நடந்த சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்து கொண்டனர். கடந்த 50 நாட்களில் நடந்த 46 போட்டிகளில் பங்கேற்ற இனியன் 27 வெற்றிகள் பெற்று உள்ளார். 11 போட்டிகளை ‘டிரா’ செய்தார்.

இவர் ஜெர்மனியில் நடந்த 35–வது பாப்லிகேன் ஓபன் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு 5–வது கிராண்ட் மாஸ்டர் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இனியன் கிராண்ட் மாஸ்டர் தகுதியை பெற இவருக்கு 13 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. இனியனின் தற்போதைய ரேட்டிங் 2 ஆயிரத்து 487 ஆகும்.

50 நாட்கள் பயணத்தை முடித்து நேற்று ஈரோடு திரும்பிய வீரர் ப.இனியன், அவரது தந்தை பன்னீர்செல்வம், தாயார் சரண்யா ஆகியோருக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்