ஊட்டியில் தேசிய மாணவர் படையினருக்கு எழுத்துத்தேர்வு

ஊட்டியில் தேசிய மாணவர் படையினருக்கு எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

Update: 2019-02-12 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட 31 தமிழ்நாடு தனி அணி தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.) ஏ கிரேடு சான்றிதழ் பெறுவதற்கான எழுத்துத்தேர்வு ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடந்தது. நீலகிரியில் உள்ள ஊட்டி புனித ஜோசப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளி, கூடலூர், தேவர்சோலை, நஞ்சநாடு, எடக்காடு, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, லவ்டேல் லாரன்ஸ் பள்ளி உள்பட 12 பள்ளிகளில் உள்ள என்.சி.சி. மாணவர்கள் 450 பேர் எழுத்துத்தேர்வை எழுதினர்.

கர்னல் தேப் தலைமையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் மாணவ-மாணவிகள் வரிசையாக அமர்ந்து தேர்வு எழுதினர். இதனை என்.சி.சி. அதிகாரிகள் சுப்ரமணியன், காமராஜ், கியூபர்ட், ஜாய் ஆகியோர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு 2 மணி நேரம் நடந்தது.

இதையடுத்து தேசிய மாணவர் படையினருக்கு செய்முறைத் தேர்வு நடைபெற்றது.

அதில் பாயிண்ட் 2.2, எஸ்.எல்.ஆர்., என்.எல்.ஜி. போன்ற துப்பாக்கிகளை எவ்வாறு கையாளுவது, ராணுவ நடைபயிற்சி, அடர்ந்த வனப்பகுதிகளில் செல்லும் போது வரைபடங்களை வைத்து செல்ல வேண்டிய இடத்தை சரியாக தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை மாணவ-மாணவிகள் செய்து காட்டினர்.

தேசிய மாணவர் படையினருக்கு எழுத்துத்தேர்வு 375 மதிப்பெண்களுக்கும், செய்முறைத் தேர்வு 125 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 200 மதிப்பெண் எடுப்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 200 மதிப்பெண்ணுக்கு கீழ் எடுத்தால் தோல்வி அடைந்ததாக கருதப்படும். தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏ கிரேடு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்