விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல்

விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-02-12 22:45 GMT

அந்தியூர்,

கடந்த 1–ந் தேதி மத்திய அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் 2 ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயிகள் பட்டியலை தயார் செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான பணிகளில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களுடைய பெயர், நிலம் போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அளித்து வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பருவாச்சி, அம்மன்பாளையம், பிச்சானூர் உள்பட 15–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுடைய விண்ணப்ப படிவங்களை நேற்று அளித்தனர்.

அப்போது கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார், விண்ணப்பம் அளித்த ஒவ்வொரு விவசாயிகளிடம் இருந்தும் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் பருவாச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.7 ஆயிரத்து 990–ஐ போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்