சேலத்தில் போலீஸ் நிலையம் அருகே ரஜினி ரசிகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

சேலத்தில் போலீஸ் நிலையம் அருகே ரஜினி ரசிகரை அரிவாளால் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இது தொடர்பாக அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-12 22:30 GMT
சேலம், 

சேலம் இரும்பாலை அருகே உள்ள கருக்கல்வாடி அழகுசமுத்திரம் நேரு நகரை சேர்ந்தவர் ரஜினி பழனி (வயது 46). இவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு பஸ்சில் சென்றார்.

பின்னர் அழகாபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, போலீஸ் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தது. பின்னர் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மறைத்து வைத்து இருந்த அரிவாள், பட்டாக்கத்தி போன்றவற்றால் ரஜினிபழனியை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை, கை ஆகியவற்றில் வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

அவர், “அய்யோ அம்மா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்“ என்று அலறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை அந்த கும்பல் பின்தொடர்ந்து கொலை வெறியுடன் துரத்தியது. கொலை கும்பல் வருவதை பார்த்த அவர் உயிர் பிழைக்க அருகில் உள்ள சாக்கடை கால்வாய்க்குள் குதித்து அதில் உள்ள சிலாப்பின் அடியில் மறைந்து கொண்டார்.

இந்த பயங்கர தாக்குதலை பார்த்து பதறிப்போன அங்கிருந்த பொதுமக்கள் சிலர் இது குறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரஜினிபழனியை சாக்கடை கால்வாயில் இருந்து மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறுகையில், அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ரஜினிபழனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டார். தற்போது போலீசாருக்கு ‘இன்பார்மராக‘ இருந்து வந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி விமர்சனம் செய்து உள்ளார். எனவே இந்த பிரச்சினைகளால் அவரை கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கலாம். இருப்பினும் வேறு ஏதாவது முன்விரோத காரணத்தால் வெட்டப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்