கரூரில் விளையாட்டு போட்டிகள் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கரூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2019-02-12 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச அளவில் உலக திறனாய்வாளர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான கரூர் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

போட்டிகளை கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

கரூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர். மேலும் மாணவர்களின் ஓடும் திறன், குண்டு எறியும் நுட்பம், உடல் வலிமை ஆகியவற்றை ஆய்வு செய்த உடற்கல்வி ஆசிரியர்கள் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் தடகள போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.80, ரூ.60, ரூ.40 என பரிசுத்தொகை வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி செய்திருந்தார். 

மேலும் செய்திகள்